
வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது வறுமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட்ட அளவீடுகள் என்ன ?
வினைதிறனான அரச நிர்வாகத்திற்காக அரசாங்கம் அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், நாட்டின் ஆட்சியாளர்களினால் வங்குரோத்துநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு நாட்டின் எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு நாட்டின் வறுமைக் கோடு தொடர்பான புதிய தரவு அறிக்கைகள் மிக முக்கியமானவை என்றும், ஆனால் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் வேளையில் வறுமை குறித்து கவனத்திற்கொள்ளப்பட்ட அளவீடுகள் மற்றும் ஆதாரங்கள் யாவை என்பதை அறிந்து கொள்வது அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
ஒரு வீட்டின் வருமானம் மற்றும் செலவு தொடர்பான மதிப்பீடு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கும் திகதியையும், இறுதியாக ஒரு வீட்டின் வருமானம் மற்றும் செலவு தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட திகதியையும், குடிசன மற்றும் வீட்டு வசதிகள் கணக்கெடுப்பு குறித்த புதிய தரவு அறிக்கை வெளியிடும் திகதியையும் அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என்பதையும், அதற்குரிய காரணங்களையும், அஸ்வெசும நிவாரணம் கிடைக்க வேண்டிய போதிலும் அந்த நிவாரணம் கிடைக்காதவர்கள் குறித்த தரவுகள் உள்ளதா என்பதையும் வினவிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், எந்த அளவுகோலின் அடிப்படையில் அந்த நிவாரணத் திட்டத்திற்குள் உள்ளடக்கப்படுகின்றனர் மற்றும் விலக்கப்படுகின்றனர் என்பதை அறிய விரும்புவதாகவும் கேள்வி எழுப்பினார்.
வறுமையை ஒழிக்க வேண்டுமெனில் உற்பத்தி, முதலீடு, சேமிப்பு, நுகர்வு, ஏற்றுமதி உள்ளிட்ட வேலைத்திட்டம் அவசியம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தையும் அறிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.