சீரற்ற காலநிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல் !

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல் !

சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேநேரம், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, இடம்பெற்றுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பாதித்த சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பலத்த காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது அல்லது அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு தகுந்த இழப்பீடு வழங்குவது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு பயனாளிகளின் இணக்கப்பாட்டின் பேரில் அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு உரிய இழப்பீடு வழங்குதல் அல்லது முப்படைகளின் பங்களிப்புடன் உடனடியாக வீடுகளைக் நிர்மாணிக்கவும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக, இடம்பெற்றுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாகவும் பகுதியளவும் சேதமடைந்த வீடுகள் தொடர்பில் முறையான அறிக்கையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு சாகல ரத்நாயக்க மேலும் பணிப்புரை விடுத்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், முப்படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டதுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )