“Shutdown Dehiwala Zoo”: விலங்குகளின் புகைப்படங்கள் உண்மையானதா ?

“Shutdown Dehiwala Zoo”: விலங்குகளின் புகைப்படங்கள் உண்மையானதா ?

தெஹிவளை மிருகக்காட்சிசாலை உள்ள விலங்குகள் என அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் பரவிவரும் சிங்கம் மற்றும் குரங்கின் புகைப்படங்கள் தவறானவை என ஹேஷ்டேக் தலைமுறை (Hashtag Generation) எனும் உண்மை சரிப்பார்ப்பு தளம் உறுதி செய்துள்ளது.

அதற்கமைய, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கத்தின் புகைப்படம் என குறிப்பிட்டு பகிரப்படும் படமானது
அல்பேனியா நாட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான மிருகக்காட்சிசாலையில் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என உறுதிப்படுத்தபட்டுள்ளது.

மேலும் குறித்த புகைப்படங்களில் காணப்படும் குரங்கின் படமானது இந்தியாவின் அகமதாபாத்தில் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் என்பதையும் ஹேஷ்டேக் தலைமுறை உறுதி செய்துள்ளது.

அண்மையில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் தனிமையில் உள்ள உடல் மெலிந்த கரடி ஒன்றின் படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவந்தன.

அதனைத் தொடர்ந்து மிருகக்காட்சிசாலையை மூட வேண்டுமென வலியுறுத்தி சமூகவலைத்தளங்களில் பல்வேறுபட்ட தரப்பினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.

அதற்கமைய குறித்த புகைப்படங்களின் உண்மை தன்மை தொடர்பில் ஆராய்ந்த ஹேஷ்டேக் தலைமுறை (Hashtag Generation) குறித்த புகைப்படங்கள் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டவை அல்ல என உறுதிசெய்துள்ளது.

மேலும் , உடல் மெலிந்த சிங்கத்தின் புகைப்படமானது
சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்திம் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள நான்கு சிங்கங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.

மேலும், சமூகவலைத்தளங்களில் வெளியான உடல்மெலிந்த கரடியின் காணொளி தொடர்பில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடு தெரிவிக்கையில் ,

“சாதாரணமாக கரடி ஒன்றின் வாழ்நாள் 20-30 வருடங்களே இருக்கும். ஆனால், எம்மிடம் உள்ள கரடிக்கு 36 வயது.

குளிர்காலத்தில் கரடியின் ரோமங்கள் உதிர்ந்து மறுபடியும் புதிய ரோமங்கள் வளரும். அதனாலேயே, கரடி மெலிந்த தோற்றத்தில் இருக்கிறது .

மேலும், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள 4 சிங்கங்களும் 2 சிங்கக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருகின்றன ‘ என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடு தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )