ஜனாதிபதி தேர்தலில் மடுரோ மீண்டும் வெற்றி
வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தலில் பதவியில் உள்ள ஜனாதிபதி நிகலஸ் மடுரோ வெற்றி பெற்றதாக அறிவித்த நிலையில், எதிர்க்கட்சி மற்றும் பிராந்தியத்தின் முக்கிய அண்டை நாடுகள் அதனை நிராகரித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜனாதிபதி தேர்தலில் மடுரோ 51.2 வீத வாக்குகளை பெற்றிருப்பதோடு எதிர்க்கட்சி வேட்பாளரான எட்முண்டோ கொன்சலஸ் உருட்டி 44.2 வீத வாக்குகளை வென்றிருப்பதாக தேர்தல் சபை அறிவித்துள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி மாளிகை முன்னர் கூடிய மடுரோ ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“வெனிசுவேலா ஜனாதிபதியாக மீண்டும் நான் தேர்வாகி இருக்கிறேன் என்பதை வெனிசுவேல மக்களுக்கும் உலகுக்கும் நான் கூறிக்கொள்கிறேன்“ என்று ஆதரவாளர்கள் முன் மடுரோ தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் 70 வீதமான வாக்குகளை வென்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணி, மடுரோவுக்கு விசுவாசமான தேர்தல் சபை வெளியிட்ட முடிவை நிராகரித்துள்ளது.
இந்த உத்தியோகபூர்வ முடிவை ‘மோசடியானது’ என்று கொஸ்டாரிக்கா ஜனாதிபதி ரொட்ரிகோ சாவேஸ் நிராகரித்ததோடு, ‘இதனை நம்பக் கடினமாக உள்ளது’ என்று சிலி ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவு குறித்து ஆலோசிக்க தமது தூதுவரை திரும்ப அழைத்ததாக பெரு அறிவித்துள்ளது. இந்த முடிவு வெனிசுவேல மக்களின் விருப்பை பிரதிபலிக்கவில்லை என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் கவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே ”வெனிசுவேலா மக்களின் கண்ணியமும், துணிச்சலும் அழுத்தம் மற்றும் தவறாக வழிநடத்துதலுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது” என கியூபா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் மடுரோ வெற்றியீட்டிய 2018 ஜனாதிபதி தேர்தலின் முடிவும்
பரவலாக நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெனிசுவேலாவில் 25 வருடங்களாக பொதுவுடமைவாத பி.எஸ்.யு.வி. கட்சி ஆட்சியில் உள்ளது. முதலில், மறைந்த ஹூகோ சாவேஸ் ஜனாதிபதியாக இருந்த நிலையில், 2013இல் அவர் புற்றுநோயால் மறைந்த பின்,நிகலஸ் மடுரோ ஜனாதிபதியானார்.