பீல்ட் மார்ஷலின் இராஜினாமா ஐக்கிய மக்கள் சக்திக்கு பலம் !
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா இராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது இராஜினாமா ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் பலமாக அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல தெரிவித்தார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அரசியலுக்கு பொருந்தாதவர் என்றும், அவர் யுத்தத்தில் ஜெனரலாக இருந்தாலும், அரசியலில் கோப்ரல் போன்றவர் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2024 ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றி தொடர்பில் நாட்டில் நிரந்தரமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பெரும்பான்மையான சிங்கள வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆகிய அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளும் தலைவர்களும் கைகோர்த்து வருகின்றனர்.
இது ஒரு வரலாற்று தருணம். எதிர்காலத்தில் நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியே நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.
இவ்வாறானதொரு ஜனாதிபதி நாட்டில் நியமிக்கப்பட்டால் மாத்திரமே நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தீர்வுகளை வழங்க முடியும்” என பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல தெரிவித்தார்.