
2028 இல் இருந்தே நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும்
மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப் பத்திரத்தை கிழித்தெறிந்த ஜனாதிபதியும் அரசாங்கமுமே தற்போது நாட்டை ஆண்ட வருகின்றது.
2022 இல் நாம் சந்தித்த தேசியப் பேரவலமாக அமைந்த நாட்டின் வங்குரோத்து நிலை ஏற்படும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய நாட்டிலயே பெரும்பான்மையினர் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
2028 ஆம் ஆண்டே நாடு எதிர்கொள்ளும் மிகக் கடினமான காலமாக அமையும். 2028 இல் நாம் கடனை செலுத்த வேண்டி இருக்கிறது. இதற்குத் தேவையான பணம் நாட்டில் கையிருப்பில் இருந்தாக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
களனி தேர்தல் தொகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கடனை செலுத்துவதற்கான பணம் அரசாங்கத்தின் வருமானம் மூலம் ஈட்டப்பட வேண்டும். உற்பத்திப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இருந்து ஈட்டப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், இங்கு எம்மால் செய்ய முடியாத விடயங்களுக்கு இணக்கப்பாடுகளை தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக கூறி வந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்கள் சார்பான ஒன்றாக மாற்றியமைப்போம் என நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.