தோல் வறட்சி நீங்கி பளபளப்பாக இருக்க வேண்டுமா ?

தோல் வறட்சி நீங்கி பளபளப்பாக இருக்க வேண்டுமா ?

வறண்ட சருமம் என்பது தோல் வறட்சியாக கரடுமுரடாக, செதில்களாக உலர்ந்து காணப்படும் நிலையாகும். இந்த உலர்ந்த திட்டுகள் உருவாகும் இடம் நபருக்கு நபர் மாறுபடும். இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். வறண்ட சருமம், ஜெரோசிஸ் அல்லது ஜெரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு வாழ்வியல் மருத்துவ காரணங்கள் உள்ளது.

தோல் பராமரிப்பு:

மனித உடல் செல்களின் அழிவை ஏற்படுத்தும் பொருட்களை செல்களில் இருந்து அகற்றி செல்களின் அழிவை தடுப்பவை ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும். வைட்டமின்களில் ஏ, சி, ஈ மற்றும் தாதுக்களில் செலினியம், துத்தநாகம், அமினோ அமிலங்களில் குளுட்டத்தயோன், எல் அர்ஜினின் போன்றவை மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஆகும். இவை உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் இளமையுடனும் நோய் அணுகாமல், தோல் வசீகரத்துடனும் திகழலாம்.

பாதாம், பிஸ்தா, வால்நட், அனைத்து வகை கைக்குத்தல் அரிசி, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பருப்பு, வாழைப் பழங்கள் போன்றவற்றில் செலினியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

பூசணி விதை, காளான், கடல் சிப்பி, இறால், கோழி இறைச்சி, சாக்லெட், பருப்பு வகைகள், கொண்டைக் கடலை, பீன்ஸ், முந்திரிப் பருப்பு போன்ற உணவு வகைகளில் துத்தநாகம் சத்து நிறைந்துள்ளது.

கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பசலைக் கீரை, பால் ஏடு, முலாம் பழம், முட்டை, மத்திச்சாளை மீன்கள், பப்பாளி, பிரக்கோலி, மாம்பழம், பச்சைப் பட்டாணி, முருங்கைக் கீரை, ஆரஞ்சு போன்ற உணவு வகைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

தோலை பராமரிப்பதற்கு சத்தான உணவுகள் மட்டும் அல்லாது, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மன உளைச்சல், மன அழுத்தம் கூடாது. தினமும் ஆறு முதல் ஏழு மணிநேரம் தூக்கம் அவசியம். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

1) தோல் வறட்சி நீங்கி பளபளப்புடன், வாசனையுடன் திகழ நலுங்குமா பயன்படுத்த வேண்டும். நலுங்குமா தயாரிக்கும் முறை: பாசிப்பயறு, வெட்டி வேர், சந்தனத் தூள், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சு வேர், கிச்சிலிக் கிழங்கு ஆகிய இந்த ஏழு பொருட்களையும் சம அளவில் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை சோப்பிற்கு பதிலாக தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி, சொறி, சிரங்கு நீங்கி, தோல் பளபளப்புடன் வாசனையுடன் இருக்கும்.

2) தோல் சொரசொரப்புடன் காணப்பட்டால், அருகம்புல் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, அதை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தோலில் தேய்த்து பின்பு குளித்து வந்தால் தோல் வறட்சிகள் நீங்கிவிடும்.

3) ஆவாரம் பூ தோல் வறட்சி, வியர்வை நாற்றத்தை நீக்குகிறது. ஆவாரம் பூ பொடி காலை, இரவு 500 மி.கி. வீதம் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளக்கும். இதை நலுங்குமா பொடியிலும் சேர்த்து குளியல் பொடியாக பயன்படுத்தலாம்.

4) பி.எச் 5.5 அளவுள்ள குளியல் சோப்புகளை பயன்படுத்தினால் தோல் வறட்சி, சொர சொரப்பு இருக்காது.

5) தேங்காய்ப் பால் சிறிதளவு எடுத்து அதனுடன் குங்குமப் பூ சேர்த்துக் காய்ச்சி, உடலில் தேய்த்து மாலை வெயிலில் சிறிது நேரம் காய்ந்து, பிறகு குளித்து வந்தால் உடல் மேன்மை அடையும். தோல் பளபளப்பாகும். தோல் நல்ல வனப்புடன் இருக்க தேங்காய்ப் பாலில் காய்ச்சிய விர்ஜின் தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)