கச்சத்தீவு வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம் !

கச்சத்தீவு வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம் !

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகி, நாளை (15) காலை திருநாள் திருப்பலியுடன் முடிவடையவுள்ளது.

இது தொடர்பாக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,

“கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

வழமைபோல இந்த ஆண்டும் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 8,000 பக்தர்களும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச சபை, யாழ் மாவட்ட செயலகம் மற்றும் கடற்படை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன,” என்றார்.

திருவிழா நிகழ்ச்சி நிரல்

வெள்ளிக்கிழமை (14) மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகும்.

தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெறும்.

சனிக்கிழமை (மார்ச் 15) அதிகாலை 4:30 மணியளவில் குறிகட்டுவானுக்கு பேருந்து சேவைகள் தொடங்கும்.

குறிகட்டுவானிலிருந்து படகு சேவைகள் மூலம் பக்தர்கள் கச்சத்தீவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

காலை 6 மணிக்கு திருச்செபமாலை.

காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருநாள் திருப்பலி ஆரம்பமாகி, 9 மணியளவில் நிறைவடையும்.

9 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டு, பின்னர் பக்தர்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பலாம்.

குடிநீர், உணவு, மலசலகூட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தாங்களாக உணவு சமைப்பதற்கோ அல்லது தீ மூட்டுவதற்கோ அனுமதி இல்லை என்றும், தேவையான உணவு வழங்கப்படும் என்றும் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலிருந்து 4,000 பக்தர்களும் 50 குருமார்களும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையின் தெற்கு பகுதி சகோதரர்களும் பங்கேற்பதால், சிங்கள மொழியில் மறையுரை உள்ளிட்ட சில வழிபாட்டு பகுதிகள் நடைபெறும்.

கொழும்பு மறைமாவட்டத்திலிருந்து அருட்தந்தை சிஸ்வாண்டி குருஸ் சிங்கள மொழியில் மறையுரை ஆற்றவுள்ளார்.

சனிக்கிழமை மாலை திருப்பலியை யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஒப்புக்கொடுப்பார், மறுநாள் காலை திருப்பலியை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடத்துவார்.

“கச்சத்தீவு திருநாள் புனிதமான ஒரு நிகழ்வு. பக்தர்கள் பக்தியுடன் இறைவனை வழிபட வேண்டும். தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, இறை ஆசி பெற அனைவரையும் அழைக்கிறோம்,” என அருட்தந்தை ஜெபரட்ணம் கேட்டுக்கொண்டார்.

இந்த திருவிழா இந்திய-இலங்கை பக்தர்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)