
திமுக – அதிமுக கூட்டணி அமைக்குமா ? அல்லதுதவெகவிற்கும் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா ?
திமுக – அதிமுக என்ற இரு கட்சிகளும் ஒன்றுசேரும் பட்சத்தில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பார்கள் எனவும், இருதரப்பிலும் அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மு.க.ஸ்டாலினின் திமுக அல்லது எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முன்வந்தால், தமிழக வெற்றி கழகத்தின் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் மொத்தமாக ராஜினாமா செய்வதைப் பரிசீலிக்கக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் எச்சரித்துள்ளதாகவும் இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது .
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியபோதும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், அதிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
இதேவேளை மேலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களுக்காக இடதுசாரி மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக அழைப்பு விடுத்து வருகிறது.
இதனால், ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
திமுக – அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு கட்சிகளுக்கும் இல்லாத நிலையில், இரு திராவிடப் பெரும் கட்சிகளிடமிருந்து வரும் அடுத்தகட்ட நகர்வுகள், தவெகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், அதாவது இரு கட்சிகளும் ஒன்றுசேரும் பட்சத்தில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பார்கள் எனவும், இருதரப்பிலும் அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இதுதொடர்பாக இருகட்சியும் எந்தச் செய்தியையும் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிறந்த எதிர்க்கட்சியாக இருப்போம் எனவும், தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக எந்த இடையூறும் செய்யாது என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக அரசியல் களம் அதிமுகவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாளில் நல்ல முடிவு வரும்’ எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகள் முடிவடையாமல் இருப்பதாலும், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவிவரும் நிலையில் தவெக வெளிப்படையாக கருத்துக்களை வெளியிடவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது .

