
தலைக்கவசம் இன்றி பயணித்த யுவதிகள் கைது
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மூன்று யுவதிகள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அதில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதன்படி, குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யுவதி மற்றும் வாகனத்தையும் புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளில், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் ஹிதிகிவுல, உனவடுன மற்றும் மொனராகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், மோட்டார் சைக்கிளை ஓட்டிய யுவதிக்கு ஓட்டுநர் உரிமம் இல்லையெனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதி இன்று (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

