
33 நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுப்பு
நாட்டின் நிலவும் தொடர்ச்சியான மழையினால், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (13) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த தகவல்கள் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
பெருக்கெடுத்து வரும் பிரதான நீர்த்தேக்கங்களில் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் அம்பேவெல நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மௌ-ஆர, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில யோதவாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்கள் அடங்குகின்றன.
மேலும், குருநாகல் மாவட்டத்தின் அம்பகொலவாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களும், கண்டி மாவட்டத்தின் நாலந்த மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்களும், மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஹார நீர்த்தேக்கமும், மன்னார் மாவட்டத்தின் யோதவாவியும் தற்போது நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அண்மையில் வாழும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

