
வைகாசி முதல் நாள் இன்று !
வைகாசி மாதத்தின் முதல் நாள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பெருமாளுக்கு உரிய மிகப் புனிதமான “விஷ்ணுபதி புண்ணிய காலம்” இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
வேத ஜோதிடத்தின் படி, சூரியன் தனது பயணத்தில் புதிய ராசிக்குள் நுழையும் தருணம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக ஸ்திர ராசிகளில் சூரியன் பிரவேசிக்கும் நேரமே “விஷ்ணுபதி புண்ணிய காலம்” என அழைக்கப்படுகிறது.
புராணங்களின்படி, நரசிம்ம அவதாரம் எடுத்து பக்தன் பிரகலாதனை காப்பாற்றிய மகாவிஷ்ணு, இரணியனை வதம் செய்த பின்னரும் உக்கிரமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது தேவர்கள் மற்றும் முனிவர்கள் மகாலட்சுமி தேவியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி மகாலட்சுமி நரசிம்மரிடம் சென்றபோது, அவரது அருளால் பெருமாள் சாந்தமடைந்து லட்சுமி நரசிம்மராக காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது.
அந்த புனித தருணமே விஷ்ணுபதி புண்ணிய காலமாக கருதப்படுவதுடன், இந்த நேரத்தில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
மேலும், மகாபலி சக்கரவர்த்தியுடன் தொடர்புடைய வாமன அவதார நிகழ்வும் இந்த புண்ணிய காலத்துடன் இணைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பேரருள் பூமியில் பொழியும் நேரமாக இது கருதப்படுகின்றது.
ஆன்மிக அறிஞர்களின் கருத்துப்படி, விஷ்ணுபதி புண்ணிய காலம் மிகவும் சக்திவாய்ந்த காலமாகும். இந்த நேரத்தில் செய்யப்படும் ஜபம், தியானம் மற்றும் வழிபாடுகள் பல மடங்கு நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது.
இன்று அதிகாலை முதல் காலை வரை நீடிக்கும் இந்த புண்ணிய காலத்தில், பக்தர்கள் அதிகாலை எழுந்து நீராடி, வீடுகளில் விளக்கேற்றி மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
அதேபோல், பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வழிபடுதல், துளசி பூஜை, கோ பூஜை மற்றும் “ஓம் நமோ நாராயணாய” மந்திரத்தை 108 முறை ஜபித்தல் ஆகியனவும் சிறப்பு பலன்களை தரும் என கூறப்படுகிறது.
இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் கடன் தொல்லைகள் நீங்கவும், செல்வ வளம் அதிகரிக்கவும், திருமண தடை நீங்கவும், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும் வழிவகுக்கும் என ஆன்மிக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், வீடுகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

