மக்கள் வங்கியின் மாற்று விகித பணப்பரிமாற்ற முறைமையில் ஏற்பட்டத் தவறால் சுமார் 656 மில்லியன் ரூபா நட்டம்

மக்கள் வங்கியின் மாற்று விகித பணப்பரிமாற்ற முறைமையில் ஏற்பட்டத் தவறால் சுமார் 656 மில்லியன் ரூபா நட்டம்

தமது பணப்பரிமாற்ற முறைமைகயில் ஏற்பட்ட மாற்று விகிதத் தவறு காரணமாக, சில வாடிக்கையாளர்களுக்கு சுமார் மூன்று வருட காலப்பகுதியில் மேலதிகமாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நட்டம் சுமார் 656 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரச வங்கியான மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட பணப்பரிமாற்ற முறைமையில் ஒரு நாணயத்திற்கான மாற்று விகிதத்தைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தவறு காரணமாகவே இப்பிரச்சினை உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இத்தவறான பரிவர்த்தனைகள் 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தவறு அண்மையிலேயே கண்டறியப்பட்டு, தற்போது அது முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் இது தவிர வேறு நிதி நட்டங்கள் ஏற்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடயம் கண்டறியப்பட்டதை அடுத்து, வங்கி ஒரு உள்வாரி மறுஆய்வைத் தொடங்கியுள்ளதுடன், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் பலப்படுத்தியுள்ளது.

மேலும், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் மக்கள் வங்கி கூறியுள்ளது.

இந்த தவறான பரிவர்த்தனைலிலிருந்து அந்த நிதியை மீளப்பெறும் நடவடிக்கைகளை மக்கள் வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளதோடு, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

வங்கியின் அன்றாட நடவடிக்கைகள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் வைப்புகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ள மக்கள் வங்கி, இந்தச் சம்பவம் வங்கியின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மைக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், வங்கியின் சொத்துத் தளம் சுமார் 3.8 ட்ரில்லியன் ரூபா என்றும் அவ்வறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )