
குமுதினி படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல்
குமுதினி படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) நெடுந்தீவு பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது.
முதன்மை நினைவுச் சுடரினை, குமுதினி படுகொலையில் தனது ஆறு மாத பச்சிளம் குழந்தையை இழந்ததுடன், தானும் படுகாயமடைந்து உயிர் தப்பியுள்ள விசுவலிங்கம் அன்னலட்சுமி ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை பி. கமல்ராஜ் அடிகளார், இந்து மத குரு கா. புவனேந்திரசர்மா உள்ளிட்ட மதத் தலைவர்கள், உறவுகளை இழந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நினைவுச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நினைவுத் தூபிக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதையடுத்து, நிகழ்வில் கலந்துகொண்டோர் மலர் அஞ்சலி செலுத்தி உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், முள்ளிவாய்க்கால் நினைவாக தீவக நினைவேந்தல் குழுவினரால் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கப்பட்டது.
பிரதீபன்

