
லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு இயந்திரங்கள் சுகாதார அமைச்சிற்கு நன்கொடை
லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இரத்தத்தால் பரவும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு அதிநவீன இரத்த பிளாஸ்மா பரிமாற்ற இயந்திரங்கள் (காம்.டெக் மல்டிபுரோசிஜரல் மெஷின்கள்), (Com.Tec MultiProcedural Machine) நாட்டின் சுகாதார சேவைற்காக, பிரீமியம் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுக்கு சமீபத்தில் நன்கொடையாக வழங்கப்பட்டன.
பிரீமியம் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் திரு. மகேஷ் பிரணந்து மற்றும் பொது மேலாளர் திரு. அச்சலா மோசஸ் ஆகியோர் இந்த இயந்திரங்களை அமைச்சரிடம் ஒப்படைத்தனர். இந்த இரண்டு இயந்திரங்களின் மதிப்பு ரூ. 5 கோடிக்கும் அதிகமாகும்.
இந்த இயந்திரம் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஒரு அதிநவீன மருத்துவ சாதனமாகும். இது பிளாஸ்மாஃபெரெசிஸ் சிகிச்சை முறையின் மூலம் நாட்டில் காணப்படும் பல பொதுவான நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கக் கூடியது. மேலும், இந்த இயந்திரம் எலிக் காய்ச்சல் மற்றும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நோயாளிகளுக்கு சிறப்பு கவனிப்பையும் வழங்குகிறது. இரத்தப் புற்றுநோய் மற்றும் தாலசீமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, செல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயுற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் முன்னேற்றத்திற்கு இந்த இயந்திரத்தினால் சிகிச்சை அளிக்க முடியும்.
அமைச்சரிடம் உபகரணங்களை ஒப்படைத்த பின்னர் பேசிய பிரீமியம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் திரு. மகேஷ் பிரணந்து இந்த நாட்டில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதே நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று கூறினார். மேலும், தனது நிறுவனம் இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை முகவராகச் செயல்படும் என்றும், நோயாளிகளுக்கான சேவைகளை வழங்க நிறுவனம் பாடுபடும் என்றும் அவர் கூறினார்.
இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இந்த நாட்டில் இலவச சுகாதார சேவையைத் தொடர்ச்சியாகவ சிறப்பாக வழங்குவதற்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு அரசாங்கம் ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிடுகிறது என்று கூறினார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் வலுப்படுத்த இத்தகைய நன்கொடைகள் மிகவும் முக்கியமானவை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பிரீமியம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர்கள் உட்பட, இதற்காக உழைத்த அனைவருக்கும் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்தார்.
தேசிய இரத்தமாற்றுச் சேவை மூலம், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் உப சேவைகளில் 19 இயந்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன என்பதும் இங்கு தெரியவந்தது.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

