
நெதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஊழல் வழக்கின் விசாரணை அமர்வு, அவசர பாதுகாப்பு கோரிக்கையொன்றைத் தொடர்ந்து இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெதன்யாகுவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவில், “பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்கள்” காரணமாக பிரதமர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த விரிவான தகவல்கள் நீதிமன்றத்திற்கும் வழக்குத் தொடருநர் தரப்பிற்கும் இரகசிய முத்திரையிடப்பட்ட உறையில் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கில், லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான மூன்று தனித்தனி வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நெதன்யாகு கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக நீதிமன்றில் சாட்சியம் அளித்திருந்தார்.
எனினும், அதன் பின்னர் இடம்பெற்று வரும் குறுக்கு விசாரணைகள் பலமுறை இடையூறுகளுக்கும் ஒத்திவைப்புகளுக்கும் உள்ளாகியுள்ளன.
2025ஆம் ஆண்டு முதல் இதுவரை, போர் சூழ்நிலை, முக்கிய இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு அட்டவணைகள் போன்ற காரணங்களை முன்வைத்து நெதன்யாகுவின் தரப்பு பலமுறை விசாரணை தாமதிக்க கோரிக்கை விடுத்து வந்துள்ளது.
இந்நிலையில், பிராந்திய அரசியல் பதற்றங்களை பயன்படுத்தி வழக்கை திட்டமிட்டு தாமதப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

