
அமெரிக்கா – ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் முன்வைத்த அண்மைய பரிந்துரைகள் தொடர்பாக, ஈரானும் அமெரிக்காவும் தங்களது கருத்துகள் மற்றும் பதில்களை பாகிஸ்தான் ஊடாக பரிமாறிக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் இராஜதந்திர முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் முன்வைத்துள்ள திட்டங்கள் தொடர்பில் உள்நாட்டு மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் தொடர்ந்தும் அதிகாரப்பூர்வ மத்தியஸ்தராக செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

