
அரச நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பில் பாரிய குறைபாடுகள் ? ; ரவி கருணாநாயக்க கேள்வி
ரவி கருணாநாயக்க இன்று பராளுமன்றத்தில் உரையாற்றியபோது, இலங்கையின் அரச நிறுவனங்களின் நிதி அமைப்புகளும் இணைய குற்றச்செயல்கள், சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங், ரான்சம்வேர் தாக்குதல்கள், தரவு திருட்டு மற்றும் டிஜிட்டல் உளவு நடவடிக்கைகளுக்கு அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் சைபர் பாதுகாப்புத் திறன் மற்றும் அரச நிறுவனங்களின் தயார்நிலை குறித்து அரசின் நிலைப்பாடு என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் நிதி அமைச்சு, வங்கி நிறுவனங்கள், ஆட்பதிவுத் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் தினக்களம், இலங்கை மத்திய வங்கி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தபால் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களை இலக்காகக் கொண்ட சைபர் ஊடுருவல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம், குடிவரவு மற்றும் குடிகல்வுத் திணைக்களம், இலங்கை மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் இணையத் தாக்குதல்கள் மற்றும் தரவு திருட்டுகளிலிருந்து போதுமான பாதுகாப்புடன் உள்ளன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
டிஜிட்டல் மாற்றம், மின் ஆட்சி முறை மற்றும் டிஜிட்டல் அடையாள முறைமைகள் குறித்து அரசு தொடர்ந்து உறுதிமொழிகள் வழங்கினாலும், பல முக்கிய நிறுவனங்கள் பழைய கணினி அமைப்புகள், பலவீனமான பாதுகாப்பு முறைகள், போதிய கண்காணிப்பு இல்லாமை மற்றும் ஊழியர்களின் தயார்நிலை குறைபாடு காரணமாக ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2023ஆம் ஆண்டு முதல் இதுவரை அரச நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் முக்கிய பொது கட்டமைப்புகளில் பதிவான சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங் முயற்சிகள், ரான்சம்வேர் தாக்குதல்கள், டிஜிட்டல் மோசடிகள் உள்ளிட்ட சம்பவங்களின் முழு விவரங்களையும் அவர் நிதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.
மேலும், சர்வதேச தரத்திற்கு ஏற்ப சைபர் பாதுகாப்பு அமைப்புகள், குறியாக்க பாதுகாப்பு, தரவு காப்பு முறைமைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் உள்ளனவா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2025 ஜனவரி முதல் இதுவரை சைபர் சம்பவங்களால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் சேவை பாதிப்புகள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்கால சைபர் போர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட இணைய குற்றச்செயல்களும் எதிர்கொள்ளப்படுவதற்காக அரசு எவ்வாறான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துமாறு ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

