
ரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் இரகசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் நடத்திவந்த மாலைதீவு பிரஜை கைது
ரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையத்தினுள் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் கல்கிஸ்சை கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகையின் போது, மாலைத்தீவு பிரஜை ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயண முகவர் நிறுவனம் ஒன்றின் பேரில் , அத்திடிய பகுதியில் இந்த நிலையம் நடத்தப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செயற்கைக்கோள் ஏற்பிகள் (Satellite Receivers), சாட்டிலைட் டிஷ்கள், கணினிகள், ஸ்டார்லிங்க் (Starlink) சாதனம் மற்றும் இதர ஒளிபரப்பு சாதனங்கள் உட்பட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் ஒருவரின் தரவுகளைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை பதிவிறக்கம் செய்து, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை விநியோகித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

