காங்கோவில் வேகமாக பரவும் எபோலா ; WHO சர்வதேச அவசரநிலை பிரகடனம்

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா ; WHO சர்வதேச அவசரநிலை பிரகடனம்

அரிய வகை எபோலா வைரஸ் பரவல் காரணமாக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையை தெரிவித்துள்ளது.

இந்த எபோலா பரவல் பெரும்பாலும் காங்கோ நாட்டில் பதிவாகியுள்ளதுடன், இதுவரை 131 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோ சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள தினசரி அறிக்கையின் படி, அந்நாட்டில் 516 சந்தேகத்திற்கிடமான தொற்றுகளும், 33 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

அதேவேளை, அண்டை நாடான உகாண்டாவில் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் தலைவர், எபோலா பரவலின் வேகமும் பரவலான தாக்கமும் குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய பரவல் “புண்டிபுக்யோ” எனப்படும் அரிய வகை எபோலா வைரசால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் முதன்முதலில் 2007-2008 காலப்பகுதியில் உகாண்டாவின் புண்டிபுக்யோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது.

பின்னர் 2012ஆம் ஆண்டு காங்கோவிலும் இதன் பரவல் பதிவாகியிருந்தது.

மனிதர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தும் எபோலா வைரஸ் இனங்களில் ஒன்றாக புண்டிபுக்யோ வகை கருதப்படுகிறது.

தொற்றுக்குள்ளான மனிதர்கள் அல்லது விலங்குகளின் உடல் திரவங்களின் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புண்டிபுக்யோ வகை எபோலா, பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது, 90 சதவீதம் வரை உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய “சயிர்” வகை எபோலாவை விட குறைவான மரண ஆபத்துடையதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும், காங்கோவில் பணியாற்றிய அமெரிக்க மருத்துவர் ஒருவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், உடல் சோர்வு, தசை வலி, தலைவலி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த நோய், பின்னர் வாந்தி, வயிற்றுப்போக்கு, உட்புற மற்றும் வெளிப்புற இரத்தக்கசிவு, பல உறுப்பு செயலிழப்பு போன்ற தீவிர நிலைகளுக்கு வழிவகுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது புண்டிபுக்யோ எபோலா வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது மருந்து எதுவும் இல்லை.

எனவே, விரைவான தொற்று கண்டறிதல், நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், தொடர்புடையவர்களைக் கண்காணித்தல், பாதுகாப்பான அடக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகள் இந்த பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )