வீராங்கனைகளை ரகசியமாக படம் பிடித்த பயிற்சியாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை

வீராங்கனைகளை ரகசியமாக படம் பிடித்த பயிற்சியாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பான UEFA, பெண்கள் கால்பந்து வீராங்கனைகளை ரகசியமாக படம் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட செக் குடியரசைச் சேர்ந்த பயிற்சியாளர் பெட்ர் வ்லாசோவ்ஸ்கிக்கு (Petr Vlachovsky) ஆயுள் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், UEFA-வின் கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை அமைப்பு விசாரணைகளை தொடர்ந்து, கால்பந்துடன் தொடர்புடைய எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு பெட்ர் வ்லாசோவ்ஸ்கிக்கு ஆயுள் முழுவதும் தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தடையை உலகளாவிய ரீதியில் அமுல்படுத்துமாறு FIFA அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், செக் குடியரசு கால்பந்து சங்கம் அவரது பயிற்சியாளர் உரிமத்தை ரத்து செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செக் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுடன், ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகள் உள்நாட்டு பயிற்சி தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

FC Slovacko பெண்கள் அணியின் மாற்று அறைகளில் வீராங்கனைகளை ரகசியமாக படம் பிடித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட FC Slovacko கழகம், “இந்த சம்பவம் மிகவும் கவலைக்கிடமானதும் அதிர்ச்சியூட்டுவதுமானதாகும்.

குற்றச்சாட்டுகள் தெரியவந்த உடனே அந்த பயிற்சியாளருடன் இருந்த ஒத்துழைப்பை நிறுத்தியதுடன், அதிகாரிகளுடன் முழுமையாக இணைந்து செயல்பட்டோம்” என தெரிவித்துள்ளது.

இதேவேளை, கால்பந்து வீரர்கள் சங்கமான FIFPRO, UEFA எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.

“வீரர்களின் பாதுகாப்பும் நலனும் கால்பந்தில் எந்த நிலையிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான வலுவான செய்தியை இந்த தீர்ப்பு வழங்குகிறது” என FIFPRO குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )