
தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கம் !
ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவித்த ஹம்பாந்தொட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என ஹம்பாந்தொட்டை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.பி. சுமனசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புத்தளம் பகுதியில் உள்ள அஞ்சல் விநியோக உத்தியோகத்தர் ஒருவர், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிய வகையில் விநியோகிக்காமல் தம்வசம் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, புத்தளம் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
குறித்த அஞ்சல் விநியோக உத்தியோகத்தர் 145 வாக்காளர் அட்டைகளை தம்வசம் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவை வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர் ஒருவர் தமது வாக்கைச் செலுத்தியதன் பின்னர் அதனைக் கையடக்க தொலைபேசியில் படம் எடுத்தல், காணொளிகளைப் பதிவுசெய்தல் மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.