ஆசாத் ஆட்சி முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் வரவேற்பு

ஆசாத் ஆட்சி முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் வரவேற்பு

சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு இரு தசாப்தங்களாக நடந்து வந்த சூழலில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் மறுபுறம் நடந்து வருகிறது.

அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது.

ஆனால், பலி எண்ணிக்கை 6 லட்சம் என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.

சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த கிளர்ச்சி வெடித்தது.

சிரியாவுக்கான அல்-கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பிலுள்ள ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பு கிளர்ச்சியில் ஈடுபட்டது. அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு என அதன் தலைவர் அபு முகமது கூறினார்.

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.

இந்த சூழலில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறினர்.

டமாஸ்கஸின் மோவாதமியா அல்-ஷாம் மற்றும் தரயா உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்தும், மிஜ்ஜே ராணுவ விமான நிலையத்தில் இருந்தும் கூட அரசு படைகள் வாபஸ் பெறப்பட்டன. இந்த சூழலில் டமாஸ்கஸ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் இருந்து வெளியேறி விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆசாத் என்ன ஆனார் என்ற விவரம் சரிவர வெளிவரவில்லை.

இதனால், ஆசாத்தின் இரு தசாப்த ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றுள்ளார்.

இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்றில், மத்திய கிழக்கில் ஒரு வரலாற்று நாள். ஆசாத்தின் ஆட்சி, டமாஸ்கஸின் கொடுங்கோல் ஆட்சி சரிந்தது. ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், பெரிய அளவிலான ஆபத்துகளும் உள்ளன.

எங்களுடைய எல்லையை கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதி கரம் நீட்டுகிறோம். ட்ரூஜ், குர்த், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் என இஸ்ரேலில் அமைதியாக வாழ விரும்பும் அனைவருக்கும் ஆதரவு கரம் நீட்டுகிறோம் என தெரிவித்து உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)