எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மீண்டும் மழை பெய்து வருவதால் யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (17) காலை வேகமாக அதிகரித்துள்ளது.

முன்னதாக, பருத்தித்துறை விசேட சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளர்கள் மாத்திரமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம், மூன்று நாட்கள் என்ற குறுகிய காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எலிக்காய்ச்சலினால் இதுவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 நோயாளிகளும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒரு நோயாளியும் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள எலிகாச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத் தரப்பினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பருத்தித்துறை பிரதேச செயலாளர் சிவ பாலசுந்தரம் சத்தியசீலன் தெரிவித்தார்.

பருத்தித்து துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம் பெற்ற துறைசார் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் , ”எமது பிரதேச செயலாளருக்கு உட்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்த நடவடிக்கையில் சுகாதாரத் தரப்பினர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

ஏனெனில் சுகாதாரத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்ற நிலையில் விரைவான செயற்பாடுகளுக்கு அவர்களுடன் நாமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி,

எமது பகுதிகளில் நோய் தொற்று ஏற்படக்கூடிய இடங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

நீர் நிறைந்த விவசாய நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் சென்று வரக்கூடியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எம்மிடம் போதிய மருந்துகள் காணப்படுகின்றது.

மேலதிகமாக மருந்துகள் தேவைப்படுமானால் சுகாதாரத் திணைக்களம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக எமக்கு தெரிவித்துள்ளது.

எமது பிரதேசத்தில் சுகாதாரத் துறை சார்ந்து ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் மருத்துவ மாணவர்களின் உதவியும் கிடைத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)