யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு!

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசரியர் பி.ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர், பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி பதவியிலிருந்து விலகுவதாகப் பேராசிரியர் ரகுராம் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் நிலைமை குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று முற்பகல் இடம்பெற்றது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும், சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும் குறித்து இந்தக் கூட்டத்தில் பல உறுப்பினர்கள் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், திட்டமிட்ட முறையில் விசாரணைகளிலே தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழியமைத்துக் கொடுப்பதாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் விரிவுரைகளைப் புறக்கணிப்பதற்கு தங்களது சங்கம் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)