
பொறுப்புகூறல் விடயத்தில் கடந்தகால அரசாங்கங்கள் போலவே தேசிய மக்கள் சக்தியும் செயல்படுகின்றது
பொறுப்புகூறல் விடயத்தில் கடந்தகால அரசாங்கங்கள் போலவே தேசிய மக்கள் சக்தியும் செயல்படுகின்றது. இதற்கான பதிலடியை தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் வழங்குவார்கள்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (27) நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘ஜெனிவா மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பல விடயங்களைக் கூறியுள்ளார். எனினும், பொறுப்பு கூறலுக்கான பொறிமுறை பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
எமது வடக்கு, கிழக்கு மக்கள் பொறுப்புகூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் உள்ளனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதிலும் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் எமது மக்கள் உறுதியாக உள்ளனர்.
ஆனால் கடந்தகால அரசாங்கங்கள்போல நீங்களும் அதேவேலையைதான் செய்கின்றீர்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீட்டு பணியகம் போன்ற விடயங்களை பாதிக்கபபட்ட சமூகம் முழுமையாக நிராகரித்த பொறிமுறைகளாகும். அது பற்றி ஜெனிவாவில் கதைத்து பயனில்லை.
புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என உறுதியளித்திருந்தீர்கள்? அது எப்போது வரும்? அதன்ஊடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா என்பது பற்றி தெளிவுபடுத்துங்கள்.
பொறுப்பு கூறல் விடயத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதற்கான பதிலடி அடுத்த தேர்தலில் அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.