
அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்தைக்கு தயார்
பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பணயக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மட்டுமே இஸ்ரேலுக்கு ஒரேவழி எனத் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்திகதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தது. அதோடு 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து, காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. 2023 நவம்பர் மாதம் பணயக் கைதிகளை விடுவிக்க இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பயணக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.
இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைவதற்குள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி வரை தொடர்ந்தது. இதில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் (ஜனவரி) 20-ஆம் திகதி பதவி ஏற்க இருந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட்டு இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை கொண்டு வந்தனர்.
இந்த போர் நிறுத்தம் 6 வாரம் ஆகும். இந்த 6 வாரத்தில் 33 பணயக் கைதிகள் (இதில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் அடங்கும்) விடுவிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டமாக இன்று நான்கு பணயக் கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. இதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்.
இந்த வாரம் இறுதியுடன் முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அடுத்த கட்டத்திற்கான போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால் போர் நிறுத்தம் தொடருமா? அல்லது இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் கூறுகையில் “பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மட்டுமே இஸ்ரேல் பணயக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பதற்கான ஒரே வழி. மாறாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற முயற்சி மேற்கொண்டால், அது பணயக் கைதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் துன்பத்திற்கு மட்டுமே வழி வகுக்கும்” எனத் தெரிவித்துள்ளது.