ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பாக இயங்குவோம்

ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பாக இயங்குவோம்

ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பாக இயங்குவோம் வாருங்கள் என்ற இணக்கத்தின் அடிப்படையிலேயே அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாக சொல்லவில்லை. என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், ”இலங்கை தமிழ் அரசுக் கட்சியோடு ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய மூன்று கட்சிகளுமாக நான்கு கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட்டு வந்திருந்தோம்.

ஆனால் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் ஒரே கொள்கையில் தனித் தனியாக போட்டியிட்டு கூட்டாக செயற்படுவதென இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்தது.

ஆனால் அதனை தவறாக சித்தரித்து தமிழரசு தனிவழி என்றவாறாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியிருந்தன.

நாங்கள் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமென நினைக்கவில்லை. இப்போது கூட முன்னரைப் போல மீளவும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து இயங்குவதற்கான அழைப்பையே விடுத்திருக்கிறோம்.

அந்த முயற்சியின் தொடராக கூட்டமைப்பில் இருந்த கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன்.

ஆனால் இக் கட்சிகளின் தலைவர்களை நான் சந்தித்த போது சாதகமாக பரிசீலிப்பதாக சொன்னவர்கள் மறுநாளே தாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர்.

இப்படி ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கிறது என்றால் அதனை நேரடியாகவே எங்களிடத்தில் சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ஏமாற்று வித்தை காட்டியமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் அவர்களின் புதிய கூட்டணியை எதிர்க்கவில்லை. அது அவர்களது உரிமை. ஆனால் அவர்களின் செயற்பாடே எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தான் நான் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் தாம் ஒரு கூட்டணியை அமைத்துள்ளதாகவும் எங்களது கட்சியின் மத்திய குழுவோடு பேசிவிட்டு வருமாறும் புளொட் தலைவர் சித்தார்த்தன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. நாங்கள் ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது.

ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பாக இயங்குவோம் வாருங்கள் என்ற இணக்கத்தின் அடிப்படையிலேயே அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து உங்களது கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாக சொல்லவில்லை.

இந்த விவகாரத்தில் மிகவும் அப்பாவித்தனமாக நாங்கள் இருந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நாங்கள் இப்போதும் கூறுகிறோம் கூட்டமைப்பில் இருந்து செயற்பட்டவர்கள் மீளவும் கூட்டமைப்பிற்கு வருவதற்கான கதவுகள் திறந்தேயுள்ளன.

அவர்கள் வராவிட்டால் தமிழ் அரசுக் கட்சி மீண்டும் தனி வழியில் போவது இயல்பானது. ஆனாலும் தமிழ்த் தலைமைகளைக் கொண்ட கட்சிகளுக்கே தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

தந்தை செல்வா வழியில் வந்தவன் நான். தேசிய தலைவரின் கொள்கையில் நிற்கிறேன். எனக்கு பயம் கிடையாது. ஆனால்

தமிழர் நலன் சார்ந்து செயற்பட வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் தான் சில முயற்சிகளை எடுத்துச் செயற்படுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)