
6,000 தமிழர்களுக்கு நடந்தது என்ன? ரணிலின் அலட்சிய பதில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து வினவிய போது அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவுதி அரேபியாவை தளமாக் கொண்ட அல் ஜசீராவில் வியாழக்கிழமை (06) மாலை ஒளிபரப்பான அல் ஜசீராவின் ஹெட் டு ஹெட் எனும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்
குறித்த நேர்காணலில் தொகுப்பாளரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
நேர்காணலின் போது, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என அடையாளம் காணப்பட்டுள்ள 6,000 மக்களில் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என வினவப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் அலட்சியமாக பதிலளித்த ரணில் விக்ரமசிங்க பின்னர், “14,000 பெயர்கள் வந்திருந்தன, எனவே நாங்கள் அதை மீண்டும் இரண்டு தொகுதிகளாக விசாரணை செய்ய முயற்சிக்கிறோம்.
அதாவது, முள்ளிவாய்க்கால் கலவரத்தில் உள்நோக்கத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வெளியே இருந்தவர்கள் என்ற இரு வகையாகும்” என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, 6000 பேரில், 616 மக்கள் குறித்த தகவல்களே கண்டுபிடிக்கட்டுள்ளன என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் தெரிவித்த போது, அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி,
“எமது நாட்டில் அனைவரையும் பாதித்திருந்த ஒரு இனப்பிரச்சினைக்கு நாங்கள் முகங்கொடுத்திருந்தோம்.
எனவே, இதனை எவ்வாறு சரி செய்யப் போகின்றோம் என முயற்சிப்பதற்கு வாய்ப்பளியுங்கள்” என கூறியுள்ளார்.
அதேவேளை, 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த தமிழீழ விடுதலை புலிகளுடனான உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதா என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு, “எந்த சமூகத்தினருக்கும் நீதி வழங்கப்பட்டிருக்கவில்லை” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.