
மனித – விலங்கு மோதல்கள் குறித்து பாராளுமன்றத்தில் கவனம்
மனித – விலங்கு மோதல்கள் தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் விஞ்ஞான ரீதியான தீர்வுகளுக்குச் செல்ல வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக அந்தந்த நிறுவுனங்களின் வகிபாகங்கள் குறித்து இங்கு வெவ்வேறாகக் கலந்துரையாடப்பட்டதுடன், காட்டு விலங்குகளின் பிரச்சினைகள், போதுமான மனித மற்றும் பௌதீகள வளங்கள் இல்லாமை போன்றவை அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் என்பனவும் இதில் அடங்கும்.
யானை – மனித மோதல்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் ஏற்படும் ஏனைய உயிரினங்களான செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்களின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும், இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயத்துறை பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குவது கடினம் என்றாலும், விரைவில் தீர்வுகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
அத்துடன், யானை மனித மோதல்களை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், யானைகள் நடமாடும் எல்லைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவற்றின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்தார். மேலும், யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்கும் வகையிலான கமரா அமைப்புக்கள் பொருத்துவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் அண்மையில் (05) கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சின் கீழ் உள்ள அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தமது நிறுவனங்கள் குறித்து குழுவிற்கு விளக்கமளித்ததுடன், வரலாற்றில் முதன்முறையாக சுற்றாடல் தொடர்பான சகல நிறுவனங்களும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் பாராட்டைத் தெரிவித்தனர்.
அத்துடன், ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெறவிருப்பது விலங்குகளின் தொகைமதிப்பீடு இல்லையென்றும், எளிய முறையிலான கணக்கெடுப்பு மாத்திரமே என்றும் கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி இங்கு தெரிவித்தார். இது பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லாத பின்னணியில், ஏதாவது ஒரு சில தரவுகளையாவது பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் கணக்கெடுப்பு மாத்திரமே இது என்றார். இவ்வாறான நிலையில், இந்த முயற்சியை கேலி செய்வது பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு குறித்து குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இடம்பெறுகின்ற பெரும்பாலான மணல் அகழ்வுகளில் 50 வீதமானவை சட்டவிரோதமானவை என கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழுவில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வனவிலங்குத் திணைக்களத்திற்குக் காணப்படும் மனிதவளம் போதுமான அளவில் இல்லாமை குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். பயிர் காப்புறுதி, ஆயுட் காப்புறுதி மற்றும் சொத்துக்களுக்கான காப்புறுதி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்தும் அவர் குழுவில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த, கௌரவ பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, இழப்பீட்டை இரட்டிப்பாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், உயிர் மற்றும் சொத்து இழப்புக்களைத் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.