
போலி இலக்கத்தகடுகள் கொண்ட வாகனத்துடன் இருவர் கைது!
தெஹியோவிட்ட மயானத்திற்கு எதிரே உள்ள உணவகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடுகளை கொண்ட ஜிப் ரக சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் உணவகத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீத்தாவாக்கை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தின் இலக்கதகடுகள் அகற்றப்பட்டிருந்ததுடன் உரிமையாளர் வாகனத்தின் உண்மையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாகனத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஒரே மாதிரியான இலக்கத்தகடுகளை கொண்ட இரண்டு மகிழுந்துகள் சமீபத்தில் வென்னப்புவ பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.
வென்னப்புவ வைகால் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஒரே இலக்கத்தகடை கொண்ட இரண்டு மகிழுந்துகளை வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்த இரண்டு மகிழுந்துகளும் கைப்பற்றப்பட்டு, மேலதிக விசாரணைக்காக சிலாபம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.