அதானி காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை

அதானி காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வினவினர்

இதற்கு பதிலளித்த அமைச்சர், அதானி நிறுவனத்தின் மின்சாரத் திட்டத்தின் விலைகள் அதிகமாக இருந்ததால், அதை மறுபரிசீலனை செய்வதற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார்.

அந்த நேரத்தில், இந்திய தாய் நிறுவனமான அதானியிடமிருந்து இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்து இலங்கை முதலீட்டு சபைக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அதன்படி, முதலீட்டு சபை இது குறித்து அமைச்சுக்கு தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இருப்பினும், காற்றாலை மின் திட்டம் குறித்து இலங்கையில் உள்ள அதானி நிறுவனத்தின் பிரதிநிதி அலுவலகத்துடனே கலந்துரையாடப்பட்டதாகவும், எனவே இந்த விடயத்தை பரிசீலிக்க நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடிதம் அனுப்பப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இந்த விடயத்தில் பதில் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

குறித்த இரண்டு வாரங்களுக்குள் எதிர்மறையான பதில் கிடைத்தால் மட்டுமே வேறு வழி பின்பற்றப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் போட்டி கொள்முதல் மூலம் மட்டுமே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)