
தமிழரசுக் கட்சியில் இணைந்தார் ரெலோவின் முக்கியஸ்தர் விந்தன்
ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த விந்தன் கனகரட்ணத்துக்கும் கட்சிக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்திருந்தன.
இந்நிலையில், திடீரென நேற்று (11) அவரும், அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக்கெண்டனர்.
ரெலோவின் ஆயுதப் போராட்டம் முதல் அரசியல் பயணம் வரை நீண்டகால உறுப்பினர் மட்டுமல்லாது அந்தக் கட்சியின் முக்கியஸ்தராகவும் விளங்கி வந்த விந்தன் கனகரட்ணம் திடீரென அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டமை தமிழ்க் கட்சிகளிடத்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.