
இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் 15,000 ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.
அங்கொடை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டாளரையும் அவரது மனைவியையும் விடுவிப்பதற்கும், வழக்கை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட சார்ஜன்ட் மேற்கண்ட தொகையை இலஞ்சமாகக் கோரியிருந்தார்.
இருப்பினும், அவர் முதலில் 20,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய நிலையில், பின்னர் அதை 15,000 ரூபாவாக குறைத்து, பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சார்ஜன்ட் நேற்று (11) காலை 11 மணியளவில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வைத்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.