
காதில் இரைச்சல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா ?
நீங்கள் அவதிப்படுவதாக சொல்கின்ற ‘பல்சடைல் டின்னிடஸ்’ என்பது காதிற்குள் கேட்கும் ஒரு வகை சீரான தாளத்துடன் துடிக்கக்கூடிய சப்தத்தோடு சேர்ந்த காதிரைச்சல் என்பதேயாகும்.
அதாவது உங்களைச் சுற்றி எந்தவித சப்தமும் இல்லாதபோதும் உங்கள் காதிற்குள் மட்டும் உங்கள் இதயத்துடிப்பின் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை ‘சீர்தாள துடிப்புக் காதிரைச்சல்’ என்றும் அழைக்கலாம்.
இந்த சப்தம் ஒருபக்க காதிலோ அல்லது இருபக்க காதிலோ கேட்கலாம். சப்தம் காதிற்குள் அதுவாகவே ஏற்படும். பின் சில நிமிடங்களில் அதுவாகவே போய்விடும். சிலருக்கு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். மொத்த ஜனத்தொகையில் சுமார் 15 சதவீதம் பேருக்கு இந்தபிரச்சினை இருக்கிறது.
இந்த ‘சீர்தாள துடிப்புக் காதிரைச்சல்’ ஏற்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வயதானவர்களிடம் தான் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக சப்தத்தை ஒரே நேரத்தில் ஒரேயடியாக கேட்பது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்து, தலை போன்ற இடங்களிலுள்ள ரத்தக்குழாய்களில் வீக்கம், காதிற்குள் அதிக அளவில் மெழுகு சேருவது, தலை கழுத்துப் பகுதியில் கட்டிகள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்று, இதய நோயுள்ளவர்கள், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்கள், ஹைப்பர்தைராயிடிசம் பிரச்சினை உள்ளவர்கள், ரத்தசோகை உள்ளவர்கள், இதுபோக இன்னும் பல காரணங்கள் காதிரைச்சலை உண்டாக்குகின்றன.
பதற்றம், மனச்சோர்வு, மனக்கவலை, எரிச்சலூட்டும் செயல்கள், சரியான தூக்கமின்மை, காது கேட்கும் திறன் குறைந்து போதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் மிக அதிக சப்தம் உள்ள இடங்களில் அதிக நேரம் நிற்பது இவைகள் எல்லாம் கூட காதிரைச்சலை உண்டுபண்ணும். காதிரைச்சல் உள்ள பலருக்கு காது கேளாமையும் லேசாக இருக்கக்கூடும்.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் ரத்த பரிசோதனை, ஆடியோகிராம், ஸ்கேன் முதலிய பரிசோதனைகளின் முடிவுகளுடன் காது மூக்கு தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணரைச் சந்தித்து அவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும்.
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதிற்குள் மருந்துகள் போடக்கூடாது. குச்சி, பென்சில், கோழி இறகு, பட்ஸ் போன்றவற்றை காதிற்குள் போட்டுக் குடையக் கூடாது.
மிக அதிக சப்தம் கேட்கும் இடங்களில் வேலை பார்ப்பவர்கள் காதிற்குள் கேட்கும் ஒலியைக் குறைக்க ‘இயர் ப்ளக்’ என்று சொல்லக்கூடிய ரப்பராலான காது செருகிகளை மாட்டிக் கொள்ளுதல் நல்லது.
பேச்சு சிகிச்சை, ஒலி சிகிச்சை, காது கேட்கும் கருவிகளை உபயோகப்படுத்துதல் போன்றவைகள் இந்த காதிரைச்சல் பிரச்சினைக்கு செய்யப்படும் ஆரம்ப சிகிச்சை ஆகும்.
காதிரைச்சல் என்பது ஒரு நோயினுடைய பிரச்சினையே தவிர இது நோயல்ல. என்ன நோயினால் இரைச்சல் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்தால் காதிரைச்சல் சரியாகிவிடும்.