
குழந்தை பேறு வழங்கும் சஷ்டி விரத வழிபாடு
தமிழ் கடவுளான முருகப்பெருமான் சூரனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி நாளில் வைரவேல் கொண்டு வதம் செய்தார். இந்த நாளையே வருடாவருடம் முருகப்பெருமானின் கந்த சஷ்டியாக 6 நாட்களுக்கு வழிபடுகிறோம். முருகப்பெருமானின் அருள் வேண்டி மேற்கொள்ளும் விரதங்களில் சஷ்டி விரதம் மிக சிறப்புடையது. மாதத்தில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. அதாவது சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நல்ல குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடிகொள்வான் என்ற பொருளும் உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த சஷ்டி திதியில், உரிய முறையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை. எனவே, காலை உணவை மட்டுமோ அல்லது பகல் உணவை மட்டுமே தவிர்த்து விரதம் இருக்கலாம். அல்லது ஒரு வேளை பழம் மட்டும் சாப்பிட்டும், பகல் பொழுதில் உப்பு இல்லாமலும் உணவு சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
முருகனுக்கு வெள்ளை நிற பூக்கள் சூட்டி, முருகனுக்குரிய பாடல்கள் பாடி விரதம் இருக்கலாம். காலையில் பால், பழம், வெற்றிலை பாக்கு மட்டும் படைத்து வழிபட வேண்டும். காய்ச்சிய பாலில் சர்க்கரை அல்லது தேன் கலந்து படைக்க வேண்டும்.
காலையில் சுவாமிக்கு படைத்த பாலை நாம் குடிக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். மாலையில் மீண்டும் வீட்டில் பால், பழம் படைத்து, ஒரு மனைப்பலகையில் ஷட்கோண கோலமிட்டு, அதில் 6 அகல் விளக்கில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். ஆறு விளக்குகளில் ஒரு விளக்காவது நெய் விளக்காக ஏற்றுவது சிறப்பு. ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டியன்று மட்டும் முழுமையாக விரதம் இருப்பது நல்லது.
ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வருபவர்களும் உண்டு. அதைப்போல ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிபட்டால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.