கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்

பட்டலந்த சித்திரவதை முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆணைக்குழு அமைத்து நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் அரசாங்கம் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்காக உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டு மென பாராளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (15) இடம்பெற்ற 2025 வரவு, செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், ”நல்லிணக்கம் மற்றும் உண்மைகளை கண்டறிதல் தொடர்பான விடயத்தில் 2015ஆம் ஆண்டில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதற்கு 17,000 வரையிலான தகவல்கள் கிடைத்திருந்தன.

அவற்றில்  5000 காணாமல் போயுள்ள இராணுவத்தினரின் பட்டியலாக இருந்தது. அத்துடன் 88/89 காலப்பகுதி முதல் 2013இல் வெள்ளை வேனில் காணாமல் போனவர்கள் வரையில் விசாரணை நடத்துவதற்காக 2022இல் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின்  30/1இன் தீர்மானத்தின் படியே இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது உண்மைகளை கண்டறித்தல் ஆணைக்குழு விடயத்தில் 1971, 1983 கலவரங்கள், யுத்தம் மற்றும் வெள்ளை வேனில் காணாமல் போனோர் ஆகியன தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற்கான வேலைத்திட்டங்களை செய்யவே எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் எப்போதும் இன பேதமின்றி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலேயே  கூறுகின்றோம். தெற்கில் நடந்ததை போன்று வடக்கிலும் பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள், காதலி, காதலர்களை கொண்டு சென்று கொன்றுள்ளனர்.  விடுதலைப் புலிகள் ஒரு பிரிவினரை கொல்லும் போது இராணுவம் இன்னுமொரு பிரிவினரை கொன்றது.

அதேபோன்று தெற்கில் ஜே.வி.பியினர் ஒரு பிரிவினரை கொல்லும் போது இராணுவம் இன்னுமொரு பிரிவினரைக்  கொன்றது. அதேபோன்று துணை இராணுவத்தினரும் கொலை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கொலை யுகம் இருந்துள்ளது.

இந்நிலையில் உண்மைகளை கண்டறியும் அலுவலகம் இப்போது மூடப்பட்டுள்ளது. குறைந்தது நீங்கள் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இப்போது சவேந்திர சில்வா, ஜெனரல் பொன்சேகா போன்றோருக்கு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாமல் இருக்கின்றது. இவர்கள் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியமளித்து தாம் நிரபராதியாக அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென்னாபிரிக்கா இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே முன்னால் வந்துள்ளது. இங்கே இதுபோன்ற கொலைகள் இடம்பெறாது. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்று கூறிக்கொண்டு இருப்பதில் பலனில்லை. அதனை நிரூபிக்கும் வேலைகளே அவசியம்.

ஐக்கிய நாடுகள் காணாமல் போனோர் தொடர்பில் தகவல்களை சேகரித்து ஐயாயிரம் பேர் வரையிலானோரின் தகவல்களை அனுப்பி இவர்கள் தொடர்பில் வேலைகளை ஆரம்பிக்குமாறு கோரியுள்ளது. அத்துடன் 16,000 பேரின் தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் உள்ளன.

ஈராக்கிற்கு அடுத்தப்படியாக அதிகளவில் இலங்கையிலேயே காணாமல் போயுள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, பரணகம அறிக்கை, இராயப்பு ஜோசப் ஆண்டகை சேகரித்த பட்டியல் இவை அனைத்தையும் இணைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மங்கள சமரவீரவையும் இவ்விடத்தில் நினைவுப்படுத்த வேண்டும். இறுதி தீர்வு கிடைக்கும் வரையில் அது தொடர்பில் நிவாரணம் கிடைக்கக் கூடிய திட்டத்தை தயாரித்தார். அதன்படி காணாமல் போனோர் தொடர்பில் மரண சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழை வழங்கும் வகையில் திட்டங்களை தயாரித்தார். கோட்டபாய  ராஜபக்ஷ் இதனை நிறுத்தினார். மாதாந்தம் ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் யாழில் ஆயிரம் பேருக்கு இது கிடைத்துள்ளது.

தெற்கில் பலருக்கு கிடைக்கவில்லை. 2024இல் இது தொடர்பில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 2025இல் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பார்க்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள்.

இதேவேளை பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இப்போது கதைக்கும் நீங்கள் கடந்த காலங்களில் சந்திரிகா அரசாங்கம், ராஜபக்ஷ் அரசாங்கம் ஆகியவற்றில் இருந்துள்ளீர்கள் அப்போது அதுபற்றி கதைக்கவில்லை. அத்துடன் நீங்கள் சித்திரவதைக்காரர் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்கவுடனேயே 2015இல் அரசாங்கத்தை செய்தீர்கள்.

நீங்கள் இப்போது பேசுவது ஏன்? அரசியலுக்காகவா? பட்டலந்தவில் மட்டுமல்ல 46 இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருந்துள்ளன. அவை தொடர்பிலும் ஆணைக்குழுக்களை அமையுங்கள். என தெரிவித்துள்ளார்..

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)