
மியன்மாரில் இருந்து 14 இலங்கையர்கள் மீட்பு
மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை மீட்டுள்ளது.
மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருப்பதாக அமைச்சு அறிவித்திருந்தது. .
2024, பெப்ரவரி 3 அன்று மியன்மாரின் துணைப் பிரதமரும் மத்திய வெளியுறவு அமைச்சருமான யூ தான் ஸ்வேயுடனும், 2025, பெப்ரவரி 13 அன்று தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் மெரிஸ் செங்கியம்போங்ஸாவுடனும் இடம்பெற்ற வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனான தொலைபேசியில் உரையாடல்கள் உட்பட, இலங்கை மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுடன், இரண்டு சந்திப்புகளிலும், கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு, தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கு உடனடி, உதவி தேவைபடுகின்றது என்பதை அமைச்சர் ஹேரத் வலியுறுத்தினார்.
மியன்மார் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் தொடர்ச்சியான ஆதரவுடன், தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் இணைந்து, மீதமுள்ள கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்காக, அமைச்சு முழுமையான ஈடுபாட்டுடன் செயற்படுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, மனித கடத்தல் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சு கடுமையாக வலியுறுத்துகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைபிடிக்கவும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்கவும் இலங்கையர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு