ஏழரைச்சனி நீங்கும்போது என்ன செய்ய வேண்டும் ?

ஏழரைச்சனி நீங்கும்போது என்ன செய்ய வேண்டும் ?

ஏழரைச் சனி நீங்கும்போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் குளிக்கவும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம்.

சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணெய் தலையில் வைத்து குளிப்பது சிறப்பு. குளித்து முடித்தவுடன் ஈரத் துணியுடன் இருக்கக்கூடாது. புத்தாடை அல்லது உலர்த்திய ஆடைகளை அணிய வேண்டும்.

குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் தக்க வேத விற்பன்னர்களை கொண்டு நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். மற்றவர்கள் நவக்கிரக ஸ்லோகங்களை சொல்லலாம்.

முதலில் குறிப்பாக சனீஸ்வர பகவானின் ஸ்லோகம் ஒன்பதையும் சொல்ல வேண்டும். வீடு அழுக்காக இல்லாமல் சுத்தமாக மெழுகி கோலமிட்டு காசு பணங்களையும, நகை ஆபரணங்களையும், பழ வர்க்கங்களையும் சுவாமி பூஜை அறையில் வைத்து கண்ணால் பார்க்க வேண்டும்.

புதிய ஆடை அல்லது அணிந்திருந்த பழைய ஆடைகளை ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும். அதுபோல ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.

ஏழை பிராமணர்களுக்கு தாம்பூலம், தட்சிணை கொடுத்து நமஸ்கரிப்பதும் நன்று. மேற்கண்டவைகளை செய்வது விசேஷம். முடியாதவர்கள் 15 நாட்களுக்குள் செய்யலாம். அதற்கும் சூழ்நிலை சரியில்லையெனில் அடுத்து வரும் ஜென்ம நட்சத்திரத்தில் செய்யலாம்.

இவ்வாறு செய்தால் சனீஸ்வர பகவானின் ஆட்சியில் சிக்கிய மனித சரீரம் பற்பல வளம் நலமும் விளையும் புனித பூமியாக மாறும். கஷ்டங்கள் குறையும். கவலைகள் தீரும். களிப்பு மிகும்.

முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணைய், நெய், இலுப்பை எண்ணைய்யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களை திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வரவேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.

இந்த தீபத்தை சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இதனைக் கண்கூடாக ஒவ்வொரு நவக்கிரக சன்னதியிலும் காணலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர்-நீலசங்கு புஷ்பம், வன்னி இலை, வில்வ இலைகளால் தீபத்தை பூஜித்து சனி பகவானை சாந்தி பரிகாரம் செய்யலாம்.

ஸ்லோகங்களை ஜெபித்து, இந்த தீப ஜோதியானது இந்த வீட்டில் நிரந்தரமான பிரகாசத்துக்கும், மகிழ்ச்சிக்கும், குதூகலத்துக்கும் ஏற்பட்டுள்ளது என்று மனதில் திடமான சங்கல்பத்துடன் மேற்கு திக்கில் வைத்து எரியவிட வேண்டும்.

இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னல்களில் இருந்து விடுவித்து சாந்தியையும், மகிழ்ச்சியையும் அளித்து சர்வ மங்களமும் அருளும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )