
அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (25) அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் உற்பத்தி, அதன் ஏற்றுமதி போன்றவற்றின் நிலைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுத் திட்டம், பயனாளிகள் தெரிவு முறை, தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாகவும் பேசப்பட்டன.
தற்போது அரசு வறிய மாணவர்களுக்கான சத்துணவு வழங்குவது தொடர்பாகவும் அமெரிக்க தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதேவேளை, அமெரிக்க அரசு இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கிவருகின்றமையும் நினைவுகூரப்பட்டதோடு, மலையக மக்களுக்கான உதவிகள், அவர்களுக்கான சேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மேலும், இலங்கை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக அமைச்சர் முதலானோரிடம் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.