
எகிப்து தூதுவருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான எகிப்து தூதுவர் கௌரவ அடெல் இப்ராஹிம், அண்மையில் (26) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான ஏழு தசாப்த கால நட்புறவை சுட்டிக்காட்டிய சபாநாயகர் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் ஆழமான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை எடுத்துரைத்தார்.
இலங்கையை ஊழலற்ற மற்றும் ஸ்திரமான பொருளாதாரத்துக்கு இட்டுச்செல்லும் அரசாங்கத்தின் முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆடைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற முக்கியமான துறைகளில் காணப்படும் வாய்ப்புக்களை ஆராயுமாறும் எகிப்து முதலீட்டாளர்களுக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.
எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம், சபாநாயகருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கள் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதற்கு எகிப்து நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, கலாசாரம் மற்றும் ஏனைய பரிமாற்று வேலைத்திட்டங்களில் இருதரப்பு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கிடையிலான மரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ளும் நோக்கில் இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.