
சர்க்கரை நோயினால் பித்தப்பையில் கற்கள் ஏற்படுமா?
பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.
பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இந்தியாவில் பித்தப்பை கற்கள் நோயினால் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் ஏற்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கற்கள் ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்:
உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால், கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள்.
பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. இவை அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான சிகிச்சை அவசியம்.
வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில்லை. பித்தப்பை கற்களை கரைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இம்முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்றஅறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பித்தப்பை கற்களை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் கூடாது. ஏனெனில் விரதம் இருப்பது பித்தப்பை இயக்கத்தைக் குறைப்பதால், பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாக வழிவகுக்கிறது. புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.