சன்ஸ்கிரீம் பற்றிய உண்மைகள்
கோடை காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். சன்ஸ்கிரீன், பேஷியல், மாய்ச்சுரைசரிங் கிரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். இதில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் விஷயத்தில் நிறைய கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அவை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
கட்டுக்கதை:
மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை.
உண்மை:
சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மேகங்கள் வழியாகவும் ஊருடுவும் அபாரசக்தி படைத்தவை. அதனால் சூரியனே தெரியாத அளவுக்கு வெயிலே இல்லாமல் இருள் சூழ்ந்த காலநிலை நிலவினாலும் கூட சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாவிட்டால் பாதிப்புதான் ஏற்படும்.
முன்கூட்டியே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கும் வழிவகுத்துவிடும். அதனால் மேகமூட்டமான நாட்களிலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள மறக்காதீர்கள்.
கட்டுக்கதை:
கருமையான சரும நிறம் கொண்டவர்கள் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தேவையில்லை.
உண்மை:
மெலனின் என்னும் நிறமி கருமையான சருமத்திற்கு இயற்கையாகவே பாதுகாப்பு அளிக்கும் என்றாலும் சூரியனிடம் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது. எந்த நிற சருமம் கொண்டவர்களாக இருந்தாலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதிலும் கருமை நிற சருமம் கொண்டவர்கள் போதிய சரும பராமரிப்பை மேற்கொள்ளாவிட்டால் சரும எரிச்சல், கரும்புள்ளிகள் தோன்றுதல், சரும புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே ஒவ்வொருவரும் சரும நிறத்தை பொருட்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.
கட்டுக்கதை:
அதிக எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் நீண்ட நேரம் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.
உண்மை:
எஸ்.பி.எப் 50 கொண்ட சன்ஸ்கிரீன் ‘சூப்பர் பவர்’ போல் செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்தான். ஆனால் நாள் முழுவதும் வெயிலில் இருந்து பாதுகாப்பை வழங்காது. அதிக வியர்வை வெளிப்பட்டாலோ, நீச்சல் பயிற்சி மேற்கொண்டாலோ மீண்டும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது அவசியமானது.
குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.
கட்டுக்கதை:
முகத்தில் மட்டும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதும். மற்ற சரும பகுதிகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை.
உண்மை:
சன்ஸ்கிரீன் என்பது முகத்திற்கு மட்டுமே உபயோகிக்கக்கூடிய கிரீம் அல்ல. கழுத்து, காது, கை, கால்கள் என எல்லா பகுதிகளிலும் சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தின் எந்த பகுதிக்கும் பாகுபாடு காண்பிக்காது. ஆடை அணிந்த பிறகு மறைக்காத உடல் பாகங்கள் அனைத்திற்கும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை:
எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீன் உடன் ஒப்பனை அணிவது போதுமானது.
உண்மை:
மேக்கப்புடன் எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீனை பூசினால் மட்டும் போதாது. பெரும்பாலானோர் போதுமான அளவுக்கு ஒப்பனை மேற்கொள்வதில்லை. மேக்கப் செய்வதற்கு முன்பாக முதலில் பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு மேக்கப் செய்து கொள்வது நல்லது.
கட்டுக்கதை:
சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் மட்டுமே போதுமானது.
உண்மை:
சன்ஸ்கிரீன் சிறந்ததுதான். ஆனால் அதுமட்டுமே சூரியனிடம் இருந்து பாதுகாப்பு தருவதற்கு ஏற்றதல்ல. சிறந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்திய பிறகு சன்கிளாஸ் அணிந்து கொள்ள வேண்டும்.
அதுபோல் அகலமான தொப்பி அணிந்து கொள்வதும், பருத்தி ஆடை உடுத்துவதும் அவசியமானது. சூரியனின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
கோடை கால மாதங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.