
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்று
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்றாகும் .
உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.
இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,’உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர்.
இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.
இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.
இன்றைய உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையின் தமிழ் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
தகவல்களுக்காக ஒன்றிணைவோம்!
உலகளவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை மிகவும் மோசமாகஇருப்பதாக எச்சரித்துள்ள சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் தகவல் அறியும் உரிமையைப்’ பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
யுனெஸ்கோ அறிக்கையின்படி, 2012 ஆம் ஆண்டிலிருந்து கருத்துச் சுதந்திரம் 10% குறைந்துள்ளது.
இது உலகப் போர்கள் மற்றும் பனிப்போர் காலங்களில் காணப்பட்ட வீழ்ச்சிக்கு ஒப்பானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் பணியின் போது 128 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
யுக்ரைன், பாலஸ்தீனம், லெபனான் மற்றும் சூடான் போன்ற மோதல் பகுதிகளில் பத்திரிகையாளர் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் .
அரச மட்டத்திலான உளவு மென்பொருட்கள் (Spyware) மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் தகவல் மூலங்கள் (Sources) சட்டவிரோதமாக கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக IFJ குறிப்பிட்டுள்ளது,
பாரிய அளவிலான பொய்ப் பிரச்சாரங்கள் ,அடையாளத் திருட்டு.,
பத்திரிகையாளர்களுக்கு பதிலாக AI பயன்படுத்துதல் போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
IFJ பொதுச் செயலாளர் அந்தோணி பெலஞ்சர் கருத்து தெரிவிக்கும்போது ,
“ஒரு ஊடகவியலாளர் மீதான ஒவ்வொரு தாக்குதலும், மக்களுக்குத் தெரிய வேண்டிய ஒரு கதையை மௌனமாக்கும் முயற்சியாகும். தகவல் தெரிவிப்பதற்கான எமது உரிமை என்பது, தகவல்களைப் பெறுவதற்கான மக்களின் உரிமையாகும். உளவு மென்பொருட்களைத் தடை செய்யவும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அரசாங்கங்களை மக்கள் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும்.”
பாரிஸில் உள்ள Hôtel de Ville சதுக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது .
நாளை பாரிஸில் IFJ இன் நூற்றாண்டு உலக காங்கிரஸ் (Centenary World Congress) நடைபெறவுள்ளது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்துகொண்டு பத்திரிகை சுதந்திரத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பார்கள்.
சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ) என்பது 148 நாடுகளில் உள்ள 187 சங்கங்கள் மூலம் உலகம் முழுவதும் 600,000 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும்.

