
செம்மணி மனிதப் புதைகுழியில் 245 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன
யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியின் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆறாவது நாளாக நேற்றும் (03) தொடர்ந்தன.
இதன்போது மேலும் 245 மனித உடல்களுக்குரிய எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட எச்சங்களில் 243 மனித உடல்களுக்குரிய எலும்புப் பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் தெரிவித்தார்.
யாழ் நீதவான் எஸ். லெனின்குமாரின் மேற்பார்வையின் கீழ் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டன.
அந்தப் பணிகள் நிறைவடையும் போது 240 மனித உடல்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 239 உடல்களின் எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளை யாழ் நீதவான் எஸ். லெனின்குமார் தலைமையில், களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவு சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, யாழ் பல்கலைக்கழக தடயவியல் மருத்துவ நிபுணர் செல்லையா பிரணவன் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள் மற்றும் அங்கு கண்டெடுக்கப்பட்ட ஏனைய பொருட்கள் அனைத்தும் யாழ் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பீடத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்கேன் பரிசோதனை அறிக்கைகளைக் கருத்திற்கொண்டு ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

