அம்பலாந்தோட்டையில் கொடூர படுகொலை

அம்பலாந்தோட்டையில் கொடூர படுகொலை

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடல பகுதியில், கடந்த ஆண்டு இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று (11) இரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய ஆயுதக்கும்பல், அவரது தலையை துண்டித்து மாமடல சந்திப் பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் உயிரிழந்தவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற போது வீட்டில் இருந்த உயிரிழந்தவரின் மாமனார்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காயமடைந்த அவர் அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

2025 ஆம் ஆண்டு இதே மாமடல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து மூவரை கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )