
சீனாவும் அமெரிக்காவும் பகையை விட்டு பங்காளிகளாகச் செயல்பட வேண்டும் – சீன ஜனாதிபதி
சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இல்லாமல் பங்காளிகளாகச் செயல்பட வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பெய்ஜிங்கில் இன்று (மே 14) நடைபெற்ற சிறப்புப் பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கௌரவம் அளிக்கும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமன்ற (Great Hall of the People) வளாகத்தின் முன்பாக இன்று காலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய இந்த வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.
பேச்சுவார்த்தையின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
தற்போது உலகம் முன்னெப்போதும் இல்லாத சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், சர்வதேச சூழல் மோதல் போக்கைக் கொண்டுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் துசிடைட்ஸ் (Thucydides) எனும் பொறியில் சிக்காமல், பெரிய நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய மாதிரியை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
உலகளாவிய சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வதன் மூலம், உலகிற்கு ஒரு நிலையான தன்மையை (Certainty) வழங்க முடியும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு அழகான எதிர்காலத்தை உருவாக்க தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ட்ரம்புடன் முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், சீன-அமெரிக்க உறவுகளை சரியான திசையில் கொண்டு செல்ல தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டானது, சீன-அமெரிக்க உறவுகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இதன்போது மேலும் தெரிவித்தார்.

