காசா போர் நிறுத்தப் பேச்சு 2ஆவது நாளாக நீடிப்பு : இஸ்ரேல் தொடர்ந்து சரமாரி தாக்குதல் !

காசா போர் நிறுத்தப் பேச்சு 2ஆவது நாளாக நீடிப்பு : இஸ்ரேல் தொடர்ந்து சரமாரி தாக்குதல் !

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்று (16) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பல மாதங்களாக விட்டு விட்டு இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் இன்னும் உடன்பாடு ஒன்றை எட்டமுடியாமல் போயுள்ளது.

10 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போரில் 40,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையிலேயே புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் நேற்றுமுன்தினம் (15) மீண்டும் ஆரம்பமானது.

எனினும் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு இஸ்ரேல் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறி இந்தப் பேச்சுவார்த்தையை ஹமாஸ் அமைப்பு புறக்கணித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும் ஆரம்பத்தை பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் பேச்சாளர் ஜொன் கிர்பி, முன்னேற்றம் காண வேண்டிய பல விடயங்கள் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரதான நாடாக உள்ள அமெரிக்காவுடன் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படுவது பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றத்தை தணிக்க உதவும் என்று அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் நம்புகின்றன.

‘இது மத்திய கிழக்கின் ஆபத்தான நேரம். நிலைமை கட்டுப்பாட்டை இழக்கக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது’ என்று பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமி குறிப்பிட்டார்.

இதன்போது இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் மற்றும் மூலோபாய விவகார அமைச்சர் ரொன் டெர்மரை சந்தித்திருக்கும் லாமி, காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் அனைத்து தரப்புக்கும் தாமதிப்பதற்கு அல்லது
சாக்குப்போக்கு கூறுவதற்கு நேரமில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

‘தற்போதைய சூழலில் எந்த ஒரு தவறான செயற்பாடும் பொதுவான மோதல் ஒன்றை தூண்டிவிடும்’ என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஸ்டபனே செஜார் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா முன்னணி தளபதி ஒருவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது பழிதீர்ப்பதற்கு ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டாருக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பிய அதேநேரம் கடந்த வியாழக்கிழமை வடக்கு காசாவில் இடம்பெற்ற மற்றொரு வான் தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டடத்தில் சிக்கியுள்ள கொல்லப்பட்டர்களின் உடல்களை மீட்பதற்கு பலஸ்தீனர்கள் போராடி வந்தனர்.

‘நாம் இங்கே கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கும்போது நெதன்யாகு ஏன் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும்?’ என்று ஜபலியாவைச் சேர்ந்த முஹமது அல் பல்வி கேள்வி எழுப்பினார்.

அவரைச் சூழ கொங்கிறீட் இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வந்தன. ஜபலியாவில் உள்ள குடியிருப்புக்கட்டடம் ஒன்றின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

இந்நிலையில் நேற்றுக் காலையிலும் இஸ்ரேல் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் அதேபோன்று துப்பாக்கிச் சூடுகளில் பலரும் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா நகரில் அல் தராஜ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் அபூ பஷர் வஹிதி குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின்
சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் வபா குறிப்பிட்டது.

கொல்லப்பட்டவர்களில் அபூ பஷர் வஹிதி, அவரது மனைவி, அவரது மகன் பஷர் மற்றும் அவரது 13 வயது மகள் ஆகியோர் அடங்குகின்றனர்.

காசா நகரில் ஷுஹதா சந்தியில்நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் அல் செய்தூன் பகுதியில் உள்ள மக்கள் குடியிருக்கும் வீடுகள் மீது சூடு நடத்தியுள்ளன.

எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு நகரான ரபாவில் இஸ்ரேலியப் படை சரமாரி பீரங்கி
தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதேவேளை முன்னர் மனிதாபிமான வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்த தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் நேற்று
உத்தரவிட்டது.

இந்தப் பகுதிகளை இஸ்ரேலை நோக்கி மோட்டார் மற்றும் ரொக்கெட் குண்டுகளை வீச ஹமாஸ் பயன்படுத்தி வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

தெற்கு நகரான கான் யூனிஸின் வடக்கு பகுதி மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரங்கள் நிரம்பியுள்ள மத்திய காசாவின் டெயிர்
அல் பலாவின் கிழக்கு பகுதியில் இருந்தே மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

வானில் இருந்து துண்டுப்பிரசுரங்களை வீசியும் குறுஞ்செய்தி மூலமும் மக்கள் அறி
வுறுத்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )