போர் நிறுத்த முயற்சி தொடரும் நிலையில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு !

போர் நிறுத்த முயற்சி தொடரும் நிலையில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு !

காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், நேற்று (18) மேற்கொண்ட குண்டு மழையில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மீண்டும் ஒருமுறை பிராந்தியத்திற்கு விரைந்துள்ளார்.

காசாவில் 317 ஆவது நாளாகவும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்று தொடர்ந்தன. மத்திய காசாவின் டெயிர் அல் பாலாஹ்வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் தாய் மற்றும் அவரது ஆறு குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் தரப்பினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதேநேரம் நுஸைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றையும் இஸ்ரேலிய போர் விமானம் இலக்கு வைத்துள்ளது. இதில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

மறுபுறம் வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாமில் உள்ள தபீல் மற்றும் அபூ காரா குடும்பத்திற்குச் சொந்தமாக குடியிருப்பு தொடர்மாடிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெற்காக கான் யூனிஸ் நகரின் கிழக்கு பக்கமாக முசப்பா குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மேலும் நால்வர் கொல்லப்பட்டு அறுவர் காயமடைந்துள்ளனர்.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் சம காலத்தில் இஸ்ரேல் பல இடங்கள் மீது பீராங்கி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

போர் நிறுத்தம் ஒன்றுக்கான இராஜதந்திர முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் எகிப்து தலைநகர் டோஹாவில் இரண்டு நாட்கள் பேச்சுகள் இடம்பெற்ற நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெறுகிறது.

அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் இடம்பெறும் இந்தப் பேச்சுக்கு இஸ்ரேல் தனது பிரதிநிதிகளை அனுப்பியபோதும் ஹமாஸ் அமைப்பு பங்கேற்கவில்லை.

எனினும் பேச்சுவார்த்தையின் விபரங்கள் கட்டாரில் உள்ள ஹமாஸ் அரசியல் பிரிவு அலுவலகத்திற்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் காசா போர் வெடித்தது தொடக்கம் 10 ஆவது முறையாக பிளிங்கன் நேற்று (18) பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

போர் தரப்புகள் இடையிலான இடைவெளியை நிரப்பும் முயற்சியை அமெரிக்கா முன்னெடுத்து வரும் நிலையிலேயே பிளிங்கனின் வருகை இடம்பெற்றுள்ளது.

இந்தப் போர் பிராந்தியத்திற்கு பரவும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதை அவசரப் படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெஹ்ரானில் வைத்து கடந்த ஜூலை 31 ஆம் திகதி ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் மீது பழிதிர்ப்பது குறித்து ஈரான் சூளுரைத்து வருகிறது.

இந்தப் போர் காசா பகுதியை சின்னபின்னமாக்கி இருப்பதோடு பெரும் மனிதாபிமான அவலத்துக்கு மத்தியில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தைத் தேடி அங்குமிங்கு அலைகின்றனர்.

‘கடலைத் தவிர எமக்கு எதுவும் மிஞ்சவில்லை’ என்று டெயிர் அல் பலாஹ்வில் தமது குடும்பத்துடன் அடைக்கலம் பெற்றிருக்கும் டமர் அல் புரை குறிப்பிட்டார்.

‘நாம் இடம்பெயர்ந்து களைப்படைந்துவிட்டோம். மக்கள் டெயிர் அல் பலாஹ் மற்றும் அல் மாவாசியின் குறுகிய நிலப்பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளார்’ என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அவர் வெறுமனே 1.5 கிலோமீற்றருக்கு அப்பால் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

‘இந்த டாங்கிகள் தொடர்ந்து முன்னேறி வந்தால் எங்கே போவது என்று யாருக்கும் தெரியாது’ என்றார்.

காசாவில் இஸ்ரேலால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதி காசாவின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் வெறுமனே 11 வீதமான இடமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இஸ்ரேல் சென்ற பிளிங்கன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மற்ற மூத்த அதிகாரிகளை சந்திக்கிறார்.

போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டுவது குறித்து நெதன்யாகு அலுவலகம் மற்றும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளன. எனினும் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் நம்பிக்கை ‘ஏமாற்றுவதாக உள்ளது’ என்றும் நெதன்யாகுவின் புதிய நிபந்தனைகள் பேச்சுவார்த்தையை சிதறடிக்கும் முயற்சி என்றும் ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தும் அதேநேரம் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றையே இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை எட்டியபோதும் கூட மீண்டும் போர் புரியும் உரிமையை இஸ்ரேல் கோரி வருகிறது என்று ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்தான், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். அதனை எந்த ஒரு பலஸ்தீனரும் எவ்வாறு ஏற்பது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காசாவில் ஒரு வருடத்தை நெருங்கும் போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

தெற்கு காசாவில் புதைகுழிகளை தோண்டும் நஜி அபூ ஹதம், போர் ஆரம்பித்தது தொடக்கம் இடைவிடாது வேலை பார்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ‘அடக்கம் செய்வதற்கு தொடர்ந்தும் இடமில்லை. நாம் களைப்படைந்துள்ளோம்’ என்று அவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் கூறினார். ‘இந்தப் போர் முடிவுக்கு வருவதை நான் எதிர்பார்த்திருக்கிறேன்’ என்றும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )