சீனா-பிலிப்பைன்ஸ் இடையே வெடித்துள்ள புதிய மோதல் !
சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ்சிற்கும் இடையே ஏற்கனவே கடல் எல்லை தொடர்பான பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளும் தென்சீனக் கடலில் மற்றொரு இடம் தொடர்பாக மோதிக்கொண்டுள்ளன.
சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுமே கடலில் உள்ள பல்வேறு தீவுகள்
மற்றும் பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்த மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாட்டுக் கப்பல்களும் மோதிக்கொள்ளுதல், கைகலப்புகள் மற்றும் போர் மிரட்டல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இரு நாட்டுக் கப்பல்களும் , சபீனா மணல் திட்டு அருகே மோதிக்கொண்டபோது பிரச்சினை தீவிரமானது.
கப்பலை வேண்டுமென்றே மோதியதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.
சீனாவால் ஜியான்பின் ஜியாவோ என்றும், பிலிப்பைன்ஸால் எஸ்கோடா ஷோல் என்றும் அழைக்கப்படும் சபீனா மணல்திட்டு, பிலிப்பைன்ஸின் மேற்கு கடற்கரையிலிருந்து 75 கடல் மைல் தொலைவிலும், சீனாவிலிருந்து 630 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் நிறைந்த பகுதி இது. இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இந்தப்பகுதிக்கு உரிமை கோரி வருகின்றன.
பிலிப்பைன்ஸ் கப்பல் வேண்டுமென்றே தங்கள் கப்பல்கள் மீது மோதியதாக சீன கடலோர காவல்படை கூறியது. அதே நேரத்தில் சீன கப்பல்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சுற்று மோதல் நடந்தது. அப்போதும் இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டன.
பிரிட்டன், ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன.
திங்களன்று 40 சீனக் கப்பல்கள் தன் இரண்டு படகுகளை இடைமறித்தன என்றும், சில மாதங்களுக்கு முன்பு மணல் திட்டு பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையின் கப்பலான தெரேசா மாக்புனாவுக்கு பொருட்களை கொண்டுசென்று சேர்க்கும் மனிதாபிமான பணியை சீனா தடுத்ததாகவும் பிலிபைன்ஸ் கூறியது.
சபீனா மணல் திட்டில் நிலத்தை ஆக்ரமிக்க சீனா முயற்சிப்பதாக பிலிப்பைன்ஸ் சந்தேகிக்கிறது.
இந்த மணல் திட்டில் நீண்ட காலத்திற்கு தங்கள் இருப்பை நிலைநாட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரசா மக்புவானா கப்பலை ஏப்ரலில் சபீனாவுக்கு அனுப்பினார்கள்.
எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக ஸ்ப்ராட்லி தீவுகளை ஆராய்வதற்கான தனது முயற்சிகளுக்கு இது முக்கியமானது என்று பிலிப்பைன்ஸ் கருதுகிறது.
இதற்கிடையில் தெரசா மக்புவானாவின் இருப்பை, மணல் திட்டை ஆக்கிர மிப்பதற்கான பிலிப்பைன்ஸின் முயற்சியாக சீனா பார்க்கிறது.
சீனர்கள் தங்கள் படகுகளில் ஏறி கைகலப்புகளில் ஈடுபடுவதாகவும், பொருட்களை பறிமுதல் செய்வதாகவும் மற்றும் காற்று நிரப்பக்கூடிய சிறுபடகுகளில் துளைகள்
இடுவதாகவும் பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டுகிறது.
சீன கடலோர காவல்படை வீரர்கள் கத்திகள், ஈட்டிகள் மற்றும் வாள்களுடன் தனது இராணுவக் கப்பல் ஒன்றில் ஏறி தன் துருப்புக்களை மிரட்டியதாக பிலிப்பைன்ஸ் சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது.
“நாங்கள் மிகவும் சக்திவாய்ந்த எதிரிக்கு எதிராக போராடுகிறோம்” என்று பிலிப்
பைன்ஸ் பாதுகாப்புப்படையின் தலைவர் கில்பர்டோ தியோடோரோ கூறினார்.
அதேநேரத்தில் சீனாவிற்கு எதிராக ஒரு வலுவான எச்சரிக்கையை வெளியிடுமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தனது படைவீரர்கள் பலர் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் கூறுகிறது.
சீனாவின் நடவடிக்கைகள் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு மரணம் ஏற்பட்டால் அது போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று அதிபர்ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் எச்சரித்துள்ளார்.